கூலிம்:
இங்குள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் ஆலயம் இடமாற்றம் செய்ய பொருத்தமற்றது என்று கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் சியா ஜென் தெரிவித்துள்ளார்.
தாமான் மக்மூரில் உள்ள இடம் நகர சபைக்கு சொந்தமான நிலம். இந்நிலையில் நில உரிமையை மாற்றுவதற்கு தளத்தின் முக்கிய பங்குதாரர்களின் ஒப்புதல் தேவை. இருப்பினும் ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த ஆலயத்தை இடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. மாறாக தொடர்ந்து வழிபாடு நடத்துபவர்களுக்கு தீர்வு காண அது முயல்கிறது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கோயில் அமைப்பதற்கு மாநில அரசு வழங்கும் அல்லது பரிந்துரை செய்யும் மாற்று இடத்தை ஆலய நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


