மத்திய அரசு இதனை ஊக்குவிக்க ‘பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Yojana) என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நன்மை கிடைக்கிறது.
சூரிய மின்சக்தி அமைப்புகள், குறிப்பாக அதிக மின் நுகர்வு உள்ள வீடுகளில், சில ஆண்டுகளுக்குள் முதலீட்டுச் செலவை மீட்டெடுக்க உதவுகின்றன. கூடுதலாக, சூரிய மின்சக்தி அமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தியை உற்பத்தி செய்கின்றன. இதனால் கார்பன் உமிழ்வைக் குறைத்து, பசுமையான எதிர்காலத்திற்கும் பங்களிக்க முடிகிறது. பொதுவாக, ஒரு கிலோவாட் (kWp) திறன் கொண்ட அமைப்பை நிறுவுவதற்கு சுமார் 10 சதுர மீட்டர் கூரை இடம் போதுமானது.
ஹரியானாவின் குருக்ஷேத்திராவில் வசிக்கும் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான தனி ராம் கஹ்லோட், 2021ஆம் ஆண்டு தனது வீட்டில் 3.5 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்பை ரூ.1.2 லட்சம் செலவில் (மானியத்திற்குப் பிறகு) நிறுவினார்.
“முன்னதாக கோடை மாதங்களில் அவரது வீட்டுக்கு மின்சாரக் கட்டணமாக ரூ.35,000 வரை வந்தது. இப்போது அது ரூ.16,000ஆக குறைந்துவிட்டது” மற்றும் “நான் முதலீட்டை ஏற்கனவே மீட்டுவிட்டேன்” என்றும் கூறுகிறார்.
அதேபோல், இந்தூரில் வசிக்கும் சுமித் ஜெயின், 2024 ஜனவரியில் 3 கிலோவாட் அமைப்பை நிறுவ ரூ.2 லட்சம் செலவிட்டார். அவருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.78,000 மானியம் கிடைத்தது. இறுதியில் அவரின் செலவு ரூ.1.2 லட்சமாகக் குறைந்தது என்கிறார்.
நாசிக்கில் வசிக்கும் முதலீட்டு ஆலோசகரான விஷால் பெட்ஸே, 2024 மே மாதத்தில் சூரிய சக்திக்கு மாறியிருக்கிறார். அவர் இதை நிதி நோக்கங்களுக்காக அல்ல, சுற்றுச்சூழலுக்காகவே செய்ததாகக் கூறுகிறார். “எங்களின் 3 கிலோவாட் அமைப்பு மாநில மின் நிலையத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இதனால் சில மாதங்களில் பூஜ்ஜியம் அல்லது குறைந்தபட்ச மின் கட்டணமே வருகிறது” என்றார். அவரது குடும்பம் தற்போது சூரிய மின்சக்தியை பயன்படுத்தி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், இன்டக்ஷன் ஸ்டவ்வையும் பயன்படுத்துகிறது. அடுத்ததாக, எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
எனினும், எல்லோருக்கும் கூரை சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவது எளிதல்ல. பெங்களூரு அபார்ட்மென்ட் அசோசியேஷனின் முன்னாள் உறுப்பினரான உபேந்திர சிங், “அனைத்து குடியிருப்பாளர்களையும் ஒன்றிணைப்பதும், ஒரே கருத்துக்கு கொண்டுவருவதும் கடினம் என்கிறார். ஏனெனில், இதற்கான விழிப்புணர்வு குறைவு மற்றும் கூடுதல் நிதியை சேகரிக்க வேண்டிய அவசியமும் இருப்பதால் இது சவாலாக இருக்கிறது” என்கிறார்.
மேலும், உயரமான கட்டிடங்களில் குடியிருப்புகள் அதிகமாக இருந்தாலும், கூரைப் பகுதி மிகவும் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு வீட்டிற்கும் தனி சூரிய அமைப்பை நிறுவுவது சாத்தியமற்றதாகிறது. இதனால், இப்படிப்பட்ட குடியிருப்புகளில் கூட்டு (shared) அல்லது சமூக அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்களே நடைமுறைக்கு ஏற்றவையாகும்.
இந்த அமைப்புகள் “கிரிட் இணைப்பு” வழியாக செயல்படுகின்றன. அதாவது, வீட்டில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரம் மாநில மின் நிலையத்திற்கே வழங்கப்படுகிறது. பின்பு, வீட்டு மின் தேவைக்கு மீண்டும் அதே நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
ஒரு வீடு உற்பத்தி செய்வதைவிட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும், மாறாக, கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்தால், அதற்கான மின்சார வரவும் (credit) கிடைக்கும். ஆண்டு முடிவில், மீதமுள்ள வரவுக்காக அரசு நிர்ணயித்த விகிதத்தின் அடிப்படையில் பணம் வழங்கப்படும்.
மத்திய அரசின் PM சூர்யா கர் யோஜனா திட்டத்தின்கீழ், அதிகபட்சம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். இதற்காக https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதன் பின்னர், கூரை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு, விற்பனையாளர் தேர்வு, நிறுவல் மற்றும் மானியக் கோரிக்கை என பல கட்டங்கள் உள்ளன.
பெரும்பாலானவர்கள் விற்பனையாளரின் உதவியுடன் ஆன்லைனில் பதிவு செய்ததாகக் கூறினர். சிலர், மானியத்தை நேரடியாக பில்லிலிருந்து கழித்துக் கொண்டதாகவும், சிலர் கூரை சூரியமின்சக்தி நிறுவப்பட்ட பின்னர், மாநில மின் வாரியத்தின் மூலம் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றதாகவும் கூறினர்.
சூரிய மின்சக்தி அமைப்புகள் தற்போது நகரங்களிலும், புறநகரங்களிலும் மெதுவாக நிறுவப்பட்டு வருகின்றன. ஆரம்ப முதலீடு சற்றே அதிகமாக இருந்தாலும், சில ஆண்டுகளில் அந்த செலவை மீட்டெடுத்து விடலாம், அதற்குப் பிறகு வரும் ஆண்டுகளில் மின்சாரச் செலவில் கணிசமான சேமிப்பு கிடைக்கும் என்பதாலும் இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.
November 07, 2025 6:02 PM IST

