Last Updated:
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த நான்கு பயணிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கசாரா ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் நோக்கி இன்று காலை புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவில் பயணிகள் தொங்கியபடி சென்றனர்.
இன்று காலை 9.30 மணியளவில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, எதிர் திசையில் வந்த ரயிலுக்கு நெருக்கமாக சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கசாராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற 10 பேர் தவறி கீழே விழுந்துள்ளனர். அதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக தானே – மும்பை புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மும்பை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என ரயில்வே துறை உறுதி அளித்துள்ளது.
June 09, 2025 12:25 PM IST


