Last Updated:
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம்-க்கு புதுச்சேரி தேர்தலில் தொகுதி ஒதுக்காத நிலையில், அக்கட்சி அதிரடி முடிவை எடுத்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவை முடிந்து இன்று வேட்புமனு திரும்பப் பெறுதலும் நிறைவடைந்தது.
இந்நிலையில், புதுச்சேரி இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 16 தொகுதிகள், திமுக 14 தொகுதிகள் எனவும் உடன்பாடு ஏற்பட்டது. மேலும், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு தலா ஒரு தொகுதி எனவும் ஒப்பந்தம் முடிவானது.
அதன்படி திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (சிபிஐ), விசிகவுக்கும் திமுக தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்தது. இதில், விசிகவுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதியில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் போட்டியிடுகிறது.
இந்தச் சூழலில், இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிக்கு ஒரு தொகுதிக்கூட ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக அக்கட்சி நான்கு தொகுதிகளில் தனித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளான இன்று இரண்டு தொகுதிகளில் தனது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
இதனையடுத்து தற்போது புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம் மற்றும் திருபுவனை தொகுதியில் தட்சணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், சிபிஎம் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், “இந்தியா கூட்டணியில் ஒரு தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என கேட்டோம். ஆனால், எங்களை அலட்சியப்படுத்தினார்கள். இதனால், லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம் மற்றும் திருபுவனை தொகுதியில் தட்சணமூர்த்தி ஆகியோரை வேட்பாளராக களம் இறக்கியுள்ளோம். மற்றத் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
Puducherry (Pondicherry)
“கூட்டணியில் அலட்சியம் செய்தார்கள்… சிபிஎம் இரண்டு தொகுதிகளில் தனித்து போட்டி” – கே. பாலகிருஷ்ணன் அதிரடி


