Last Updated:
மாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்காவிட்டால் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட்,ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் ஏற்படலாம்.
பள்ளிகளில் முகாம்களை அமைத்து மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்களை செய்து முடிக்கும்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பள்ளிகளில் பயின்று வரும் 5 மற்றும் 15 வயது மாணவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதற்காக பள்ளிகளில் முகாம்களை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், பள்ளி கல்வித் துறையுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு பிளஸ் என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் பயோமெட்ரிக் புதுப்பிப்பு எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆதாரில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதற்கு இது முக்கியம் என்று கூறியுள்ள அவர், சுமார் 17 கோடி ஆதார் எண்களின் பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்காவிட்டால் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட்,ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார்.
August 29, 2025 7:25 AM IST