கோலாலம்பூர்:
முகநூல் (Facebook) விளம்பரத்தைப் பார்த்து போலி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்த கோலாலம்பூரைச் சேர்ந்த 50 வயது தொழிலதிபர் ஒருவர், 1.25 மில்லியன் மலேசிய ரிங்கிட் பணத்தை இழந்துள்ளதாக வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் முகநூலில் ‘JMC Capital Club’ என்ற பெயரில் வந்த ஒரு விளம்பரத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டு, ‘TRADEJMC’ என்ற செயலியை (App) பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
அந்தச் செயலியில் அவருக்கு 16.7 மில்லியன் ரிங்கிட் லாபம் கிடைத்துள்ளது போலக் காண்பிக்கப்பட்டது. இதை உண்மை என்று நம்பிய அவர், 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை 23 முறை பல்வேறு வங்கிச் கணக்குகளுக்கு மொத்தம் RM1.25 மில்லியன் பணத்தை அனுப்பியுள்ளார்.
தனது லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, லாபத்தில் 30 சதவீதமான RM4.5 மில்லியன் தொகையை ‘கூடுதல் கட்டணமாக’ செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர், இது குறித்து விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜனவரி 6-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார்.
மோசடியாளர்கள் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்த ‘குளோன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
JMC M Trading Venture, JMC Top Trading, JCG Entire Trading Sdn Bhd போன்ற நிறுவனப் பெயர்களில் உள்ள வங்கிச் கணக்குகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தில் (SSM) ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டுமே அந்த நிறுவனம் பாதுகாப்பானது என்று நம்பிவிட வேண்டாம். மோசடியாளர்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனக் கணக்குகளையும் (Mule Accounts) மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள்.




