பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 169 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் 39 பந்துகளல், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
முன்னதாக பெங்களூரு அணி பேட்டிங்கின் போது முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் அதிரடி பேட்ஸ்மேனான பில் சால்ட் எளிதாக கொடுத்த கேட்ச்சை ஜாஸ் பட்லர் தவறவிட்டிருந்தார். இது கேப்டன் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இந்த குற்ற உணர்ச்சியின் காரணமாகவே இலக்கை துரத்திய போது ரன்கள் வேட்டையாடிதாக ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பில் சால்ட் கேட்ச்சை தவறவிட்டது மிகவும் சங்கடமாக இருந்தது. அவர், எந்த அளவுக்கு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை அனைவரும் அறிவோம். அவரது கேட்ச்சை தவறவிட்டதால் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை. மோசமாக செயல்பட்டோம். நான் உட்பட அனைவரும் சிறப்பாக பீல்டிங் செய்திருந்தால் நாங்கள் துரத்திய வேண்டிய இலக்கு குறைவாகவே இருந்திருக்கும்.
இது சிறப்பான வெற்றி, இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். சுதந்திரமாகவும், சிறந்த நோக்கத்துடனும் விளையாட முயற்சித்தேன், கடந்த சில மாதங்களாக சுவாரஸ்யமற்ற வகையில் எனது ஆட்டம் இருந்தது. இப்போது எனது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முயற்சிக்கிறேன். இங்கு இருப்பது உற்சாகமாக இருக்கிறது. ஆடுகளத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது, ஆனால் எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் புத்திசாலித்தனமாக விளையாடி இலக்கை துரத்துவதை எளிதாக அமைத்துக் கொடுத்தனர்” என்றார்.