இந்த முடிவின் மூலம், கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வரம்பிற்குள் கொண்டு வரப்படவுள்ளனர். இந்த திருத்தப்பட்ட சம்பள உச்சவரம்பு செப்டம்பர் 17, 2026 முதல் அமலுக்கு வருகிறது. எனினும், புதிதாக கட்டாய வரம்பிற்குள் கொண்டு வரப்படம் ஊழியர்களின் மாதாந்திர நிகர ஊதியம் (Take home Salary) குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு கட்டாய இபிஎஃப் வரம்பிற்கு வெளியே இருந்த (ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும்) ஊழியர்களின் மாதாந்திர நிகர ஊதியம் கணிசமாக குறையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ‘கிங் ஸ்டப் & காசிவா’ நிறுவனத்தின் சட்ட நிபுணர் ரோஹிதாஷ்வ் சின்ஹா கூறுகையில், “முன்பு கட்டாய பிஎஃப் வரம்பிற்குள் வராத ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் தான் இதன் உடனடி தாக்கத்தை எதிர்கொள்வார்கள். உதாரணமாக,ரூ.20,000 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியருக்கு 12% பிஎஃப் பங்களிப்பாக மாதம் சுமார் ரூ.2,400 வரை பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு, ஆண்டுக்குச் சுமார் ரூ.28,800 வரைக் குறையும். அதேபோன்று, ரூ.25,000 மாத அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத் தொகையில் மாதம் ரூ.3,000 வீதம் குறையும். இதனால் செலவழிக்கும் திறன் குறையும்”என்றார்.
இதில் உள்ள நன்மைகள் என்ன? ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை ஒரு வருமான இழப்பாகக் கருதக் கூடாது என்றும் அது எதிர்காலப் பாதுகாப்பிற்கான சிறந்த சேமிப்புத் திட்டமாகும் என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ‘கார்மிகா வெல்த் மென்டார்ஸ்’ அமைப்பின் நிபுணர் கிராங் காந்தி கூறுகையில்,”புதிய உச்சவரம்பினால், ஊழியர்களின் பிஎஃப் தொகை கணிசமாக உயரும். ஆனால், அதே அளவுக்கு இணையான தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனமும் செலுத்த வேண்டும். இதன் காரணமாக, ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்குப் பெரிய அளவிலான தொகுப்பு நிதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எப்படி உயரும்? அதற்கு இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ், ஊழியரின் மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, நிறுவனமும் தனது பங்களிப்பைச் சேர்த்து ஊழியரின் பிஎஃப் கணக்கில் செலுத்துகிறது. இந்த மொத்தச் சேமிப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு, அதுவும் அசல் தொகையுடனே இணைக்கப்படுகிறது. இதில், தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது.
2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில், மாத ஊதிய உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பின்னர் செப்டம்பர் 2014-ல் இது கணிசமாக உயர்த்தப்பட்டு ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு, முறைசார் வேலைவாய்ப்பின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த உச்ச வரம்பை மேலும் ரூ 25,000-ஆக உயர்த்துவதன் மூலம், தற்போதைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய உச்ச வரம்பின் கீழ், இந்த ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான அதிகபட்ச அடிப்படைச் சம்பள வரம்பு வெறும் ரூ.15,000 ஆகும். அதாவது, தொழிலாளியின் மொத்த சம்பளம் ரூ.30,000 ஆக இருந்தாலும், இந்த 15,000 ரூபாய்க்கு மட்டுமே ஓய்வூதியப் பங்களிப்பு கணக்கிடப்படும். இதன்படி, நிறுவனம் செலுத்தும் 8.33 சதவீத ஓய்வூதியப் பங்களிப்பைக் கணக்கிட்டால் (ரூ.15,000 x 8.33%), மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.1,250 மட்டுமே தொழிலாளியின் ஓய்வூதியக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஊதிய உச்ச வரம்பின் கீழ், அதே 8.33 சதவீதத்தைக் கணக்கிடும்போது (ரூ.25,000 x 8.33%), நிறுவனத்தின் ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை மாதத்திற்கு ரூ.2,083 ஆக அதிகரிக்கும். ஆகவே, இதுவரை பழைய வரம்பின்படி மாதந்தோறும் ரூ.1,250 மட்டுமே ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், புதிய வரம்பு அமலுக்கு வந்தால் அந்தத் தொகை ரூ.2,083 ஆக உயரும். அதாவாது, கூடுதலாக ரூ.833 தொழிலாளியின் ஓய்வூதியக் கணக்கில் வரவாகச் சேரும்.
ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இதன் தாக்கத்தைக் கணித்துள்ள நிதி நிபுணர் சின்ஹா, 35 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரியும் ஒரு ஊழியர், புதிய சம்பள வரம்பின் கீழ் மாதத்திற்கு ரூ.12,500 வரை ஓய்வூதியம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். இது பழைய ரூ.15,000 வரம்பில் கணக்கிடப்படும் ஓய்வூதியத் தொகையான ரூ.7,500-ஐ விட 66 சதவீதம் அதிகமாகும். அதேபோல, 30 ஆண்டுகள் பணிக்காலம் கொண்ட ஒருவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,429-ல் இருந்து சுமார் ரூ.10,714 ஆக உயரக்கூடும் எனவும் கணித்துள்ளார். எனினும், இந்த அதிகரிப்பானது ஊழியரின் பணிக்காலம், சம்பளக் கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளைப் பொறுத்தே மாறுபடும் எனவும் அவர் விளக்கினார்.
இப்படியும் ஒரு சிக்கல்: புதிய உச்சவரம்பு அமலுக்கு வந்தாலும், அது முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது. அதாவது, ஏற்கனவே பல ஆண்டுகளாகப் பணியில் உள்ள ஊழியர்களின் கடந்தகாலப் பணிக்காலத்திற்கு, பழைய நடைமுறைப்படியே ஓய்வூதியம் கணக்கிடப்படும். புதிய சம்பள வரம்பு அமலான பிறகு வரும் பணிக்காலத்திற்கு மட்டுமே புதிய கணக்கீட்டு முறை பொருந்தும். உதாரணமாக, 15 ஆண்டுகள் பணிக்காலம் கொண்ட ஒருவருக்கு, இந்தப் புதிய மாற்றத்தால் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால், முந்தைய பணிக்காலத்திற்குப் பழைய சம்பள வரம்பும், இனிவரும் பணிக்காலத்திற்குப் புதிய சம்பள வரம்பும் என இரண்டும் கலந்த விகிதாச்சார அடிப்படையிலேயே (Pro-rata basis) இறுதி ஓய்வூதியம் கணக்கிடப்படும். இதற்கான துல்லியமான கணக்கீட்டு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

