Last Updated:
ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும், கடன் பெற்ற நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு எண் 2-ன்படி, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் (Rural Business Loan) ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய காலக் கடன்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக்கடன்களை வழங்குவதற்கான மாதிரி ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் உரிய அங்கீகாரம் பெற்று கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

