கோலா திரெங்கானு:
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றிய போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 48 வயது மின்சாரப் பணியாளர் (Electrician) ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான 150,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி பாதிக்கப்பட்ட நபரின் வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதில் பேசிய பெண் தன்னை ‘மைரா’ (Maira) என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் என்று, கோலா திரெங்கானு மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்தார் .
அவர் காட்டிய முதலீட்டுத் திட்டத்தை நம்பி பாதிக்கப்பட்ட நபர் முதலில் 5 முறை சிறிய தொகைகளை முதலீடு செய்துள்ளார். அதற்கு வாக்குறுதி அளித்தபடி லாபமும் கிடைத்துள்ளது. இதனால் இந்தத் திட்டம் உண்மையானதுதான் என அவர் முழுமையாக நம்பியுள்ளார்.
பெரிய வலை: ஐந்தாவது முறைக்குச் பிறகு, அந்தப் பெண் RM100,000 மதிப்பிலான பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு RM70,000 போனஸ் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய அந்த மின்சாரப் பணியாளரான பாதிக்கப்பட்டவர், கடந்த ஜூலை 8 முதல் 16-ஆம் தேதிக்குள் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 4 கட்டங்களாக மொத்தம் RM150,000 பணத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால், பணம் அனுப்பிய பிறகு வாக்குறுதி அளித்தபடி எவ்வித லாபமும் வரவில்லை. அது குறித்துக் கேட்டபோது, அவரின் முதலீட்டுக் கணக்கு முடக்கப்பட்டு (Frozen) விட்டதாகவும், பணத்தை எடுக்க வேண்டுமானால் மேலும் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர், நேற்று மாலை 5.05 மணியளவில் போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் தனது சொந்தச் சேமிப்புப் பணத்தை இதில் இழந்துள்ளார். இந்த வழக்கு தற்போது தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் (ஏமாற்றுதல்) கீழ் பதிவு செய்யப்பட்டுத் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
அறிமுகமில்லாத நபர்கள் சமூக வலைதளங்கள் மூலம் காட்டும் அதிக லாப ஆசைகளை நம்பி பொதுமக்கள் தங்களின் பணத்தைப் பறிகொடுக்க வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.



