கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், வீட்டின் முற்றத்தில் நடந்து கொண்டிருந்த 91 வயது மூதாட்டி, திடீரென வந்த குரங்கால் கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா பேகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை வழக்கம்போல் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அவர், வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி குரங்கு ஒன்று திடீரென குதித்து வருவதைப் பார்த்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குரங்கு மூதாட்டியின் மீது பாய்ந்து அவரைத் தள்ளியுள்ளது. இதில் நிலைதடுமாறி வீட்டின் கான்கிரீட் தரையில் விழுந்த நஜ்முன்னிசா பேகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சம்பவம் நடந்தபோது மற்றுமொரு வயதான பெண்ணும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில், அவரையும் அந்தக் குரங்கு தாக்க முற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று குரங்கை விரட்டியுள்ளனர். பொதுமக்கள் திரண்டதும் அந்த விலங்கு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமிராவில் இந்தச் சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது. அதில் குரங்கு சுவரைத் தாண்டி வந்து மூதாட்டியைத் தள்ளுவதும், அவர் கீழே விழுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
உயிரிழந்த நஜ்முன்னிசா பேகம், உள்ளூர் எழுத்தாளர் எம்.எஸ். சவடத்தியின் மனைவியாவார். வீட்டின் முற்றத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

