முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இதன்படி எதிர்வரும், ஒக்டோபர் 5ஆம் திகதியில் சாட்சியங்களை அழைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஊழல் விசாரணை ஆணைக்குழு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அசித்த அன்டனி முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் உள்ள வீதிகளுக்கு தார் இடும் பணிக்கான ஒப்பந்ததாரரை தெரிவு செய்வதற்காக 2014ஆம் ஆண்டு கொள்வனவு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

அந்த காலப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார ஜயகொடி, நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றியதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, உரிய கொள்வனவு நடைமுறையின் ஊடாக வீதி தார் இடும் பணியை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்த நிறுவனத்துக்கு முற்பண உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.8,859,708 முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீளப் பெறப்பட்ட தொகை
கொள்வனவு மற்றும் நிதிப் பிரிவுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின்னர், உரிய கொள்வனவு நடைமுறை முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பணம் செலுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த நிறுவனம் வீதிகளுக்கு தார் இடும் பணியை மேற்கொள்ளத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறுவன வளாகத்திலேயே கைவிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்த முற்பண உத்தரவாதத்தின் கீழ் பின்னர் ரூ.2,214,921 மாத்திரமே மீளப் பெறப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

