குப்பைகளை அகற்றாவிட்டால் கூடுதல் வரி.. வீட்டு உரிமையாளர்களுக்கு செக் வைத்த மாநகராட்சி..!!
இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் டிராஃபிக்கை தொடர்ந்து பெரிய பிரச்சினையாக இருப்பது குப்பை தான். வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தொழில் ரீதியாக பெங்களூருவுக்கு படை எடுக்கும் நிலையில் நகரம் தூய்மையாக இல்லை என்றால் அது நகரத்தின் பெயரையே கெடுக்கிறது. இந்நிலையில் தான் பெங்களூரை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வீடுகளில் சேரும் குப்பைகள் அகற்றம் ஒரு புறம் என்றால் , கட்டுமான பணிகளுக்காக பழைய கட்டிடங்களை இடிப்பது , புது கட்டிடம் கட்டும் பணியின் போது ஏற்படும் குப்பைகள் மாநகராட்சிக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மனை உரிமையாளர்கள் இந்த குப்பைகளை அகற்றாமல் அங்கேயே போட்டுவிடுகின்றனர். இதற்கு தீர்வு காண பெங்களூரு மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் காலியாக உள்ள நிலங்கள் அல்லது மனைகளின் உரிமையாளர்கள், தங்களது இடங்களில் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகள், புதர்கள் மற்றும் கழிவுகளை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி சார்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அதற்குள் குப்பைகளை சுத்தம் செய்ய தவறும் உரிமையாளர்களின் மனைகளை, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகமே நேரடியாகச் சென்று சுத்தம் செய்யும், அதற்கான செலவினை அந்த மனையின் சொத்துவரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா எச்சரித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள காலியான மனைகளில் குப்பைகள், கட்டுமானக் கழிவுகள், மண் மேடுகள் மற்றும் தேவையற்ற புதர்கள் மண்டிப்போயுள்ளன. இது நகரத்தின் அழகை கெடுப்பதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கிறது. இதை முழுமையாக நீக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் தூய்மையை மேம்படுத்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் Freedom from Waste என்ற பெயரில் ஒரு மாத தூய்மை இயக்கத்தை பெங்களூரு மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சிகள், கே-ரைடு , ரயில்வே, மெட்ரோ மற்றும் பிற அரசு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அது தவிர கட்டுமான பணிகளால் உருவாகும் கழிவுகளை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயம் என தெரிவித்துள்ளது. பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் தகவலின்படி, நகரத்தில் உள்ள 1,616 இடங்களில் சுமார் 22,732 டன் கழிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
