பஹ்ரைன்: இளையோர் ஆசிய விளையாட்டு போட்டி பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் பதக்க வேட்டை நிகழ்த்தியது.
குத்துச்சண்டையில் சிறுமியர்களுக்கான 46 கிலோ எடைப் பிரிவில் குஷி சந்த் 4-1 என்ற கணக்கில் சீனாவின் லுவோ ஜின்சியுவையும், 50 கிலோ எடைப் பிரிவில் அஹானா சர்மா, கொரியாவின் மா ஜாங் ஹயாங்கையும், 54 கிலோ எடைப் பிரிவில் போரேஷி புஜாரி 5-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முகமதுவா கும்ரினிசோவையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.
சிறுவர்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லாஞ் சன்பா இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூர்மகான் ஜூமாகலியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
கடற்கரை மல்யுத்தத்தில் சிறுவர்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சானி சுபாஷ் ஃபுல் மாலியும் சிறுமியர்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் அஞ்சலியும் தங்கப் பதக்கம் வென்றனர். சிறுவர்களுக்கான 90 கிலோ எடைப் பிரிவில் அர்ஜுன் ருகில் தங்கப் பதக்கம் வென்றார்.

