
Last Updated:
அனூப் குமார் உள்ளிட்டோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் இல்லை. சந்தேகம் அடைந்த பணியாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசை நாடியுள்ளார்.
பெங்களூருவில் சமீபத்தில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தற்போது மீண்டும் ஒரு தற்கொலை பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆர்எம்வி 2வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வந்தவர்கள் அனூப் குமார் (38) மற்றும் அவரது மனைவி ராக்கி (35). இந்த தம்பதிக்கு பிரியங்கா என்ற பெண் குழந்தையும், பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட அனூப் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே நேற்று காலை இவர்களின் வேலைக்காரர் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது.
கதவை திறக்க கோரி காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். எனினும் வீட்டிலிருந்து எந்தவித பதிலும் இல்லை. இதையடுத்து அனூப் குமார் உள்ளிட்டோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் இல்லை. சந்தேகம் அடைந்த பணியாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசை நாடியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் வந்து சோதித்தபோது அனூப் குமார் மற்றும் அவரது மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் இருவரும் தரையில் சடலமாக கிடந்த அதிர்ச்சியும் தெரியவந்தது. இதன்பின் 4 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனூப் குமாரும், அவரின் மனைவியும் தூக்கில் தற்கொலை செய்துகொள்ளும் முன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர். எனினும், தற்கொலை கடிதம் எதுவும் இல்லை என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை நாடியுள்ளனர்.
அதேநேரம், தற்கொலை செய்துகொள்ளும் முன் அனூப் குமார் தனது தம்பிக்கு மெயில் அனுப்பியுள்ளது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ மெயில் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனூப் தம்பதியினர் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தனரா என்கிற ரீதியில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலையை அடுத்த சில நாட்களிலேயே நடந்துள்ள இந்த தற்கொலையும் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
January 07, 2025 1:26 PM IST

