Last Updated:
ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது
செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 21 ஆம் தேதியன்று, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியதால், புதிய தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் இந்திய குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்திற்குத் தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
மக்களவை உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வர். அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அண்மையில் இறுதி செய்தது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களின் பட்டியல் மாநிலங்களின் அடிப்படையில் அகர வரிசையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஆணையம், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
அதேபோல ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 25 தேதியை கடைசி நாளாக அறிவித்துள்ளது.
மேலும் தேர்தல் நடைபெற்றால் செப்டம்பர் 9 காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு எனவும், அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
Chennai,Tamil Nadu
August 01, 2025 1:05 PM IST