Last Updated:
மணிப்பூரில் நீடித்த வன்முறையால் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்தார்.
மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் என். பிரேன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த மே 2023 முதல் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே மணிப்பூரில் நிலவி வரும் இன வன்முறை, மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. இந்த வன்முறையைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட முதலமைச்சர் என். பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பாஜக அரசால் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது.
ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பின் 356வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு விதிகளின்படி அரசாங்கத்தை நடத்த முடியாது என்று ஜனாதிபதி திருப்தி அடைந்தால், இந்த நடவடிக்கையை எடுக்கலாம். இதன் விளைவாக, மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி ஆட்சியின் போது என்ன நடக்கும்?
மாநில அரசு, ஆளுநர் மற்றும் மாநிலத்திற்குள் உள்ள வேறு எந்த நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார். மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும். குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநர் மாநிலத்தை நிர்வகிப்பார். மேலும் மாநில தலைமைச் செயலாளர் அல்லது ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசகர்களிடமிருந்து ஆளுநர் உதவி பெறுவார்.
ஜனாதிபதி ஆட்சியின் கால அளவு:
ஜனாதிபதி ஆட்சி ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தப்படும், மேலும் சிறப்பு சூழ்நிலைகளில் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். இந்த காலகட்டத்திற்குள் அரசியலமைப்பு இயந்திரங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க: அப்பாவிடம் எடுத்த சபதம் முதல் கலைஞர் கொடுத்த பரிசு வரை – மனம் திறந்த குஷ்பு
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி:
மணிப்பூரில் 11வது முறையாக ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். 1951 முதல், இந்தியாவில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 135 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
February 17, 2025 2:41 PM IST