தேர்தல் ஆணையம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் என்ன? தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் அதன் சார்ந்த நடைமுறைகளில் பெரும்பான்மை முடிவு இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக செய்திகளில் தகவல் வெளியானது. வெளிப்படைத்தன்மை இல்லாத நடைமுறையால நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 10% பேரின் (13 கோடி பேரின்) வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற்னர். தேர்தல் தலைமை ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
புதிய தேர்தல் ஆணையர்கள் சட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகக் காரணம் என்ன? இந்த சூழலில், தேர்தல் ஆணையர்கள் 2023 சட்டத்தின் பிரிவு 16-ல் “பதவியில் இருப்பவர் அல்லது இருந்தவர்” (is or was) என்ற சொல்லைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு ஆயுள்காலப் பாதுகாப்பு (Lifelong Immunity) வழங்கப்பட்டுள்ளது. முன்னாதாக, திராவிட கழக தலைவரை கீ.வீரமணி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “எதிர்காலத்தில் செய்யப்போகும் முறைகேடுகளுக்கு முன்கூட்டியே போடப்பட்ட சட்டப் பாதுகாப்புத் திட்டமே இதுவென்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகள் என்ன? அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்குப் பதவிக் காலத்தில் விரிவான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. இவர்கள் தங்கள் பதவிக் காலத்தில் எடுக்கும் அலுவல் ரீதியான முடிவுகளுக்காக எந்த நீதிமன்றத்திற்கும் நேரில் சென்று பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், இவர்கள் பதவியில் இருக்கும் வரை இவர்கள் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கையும் தொடரவோ அல்லது விசாரிக்கவோ முடியாது. இவர்களைக் கைது செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்க முடியாது. ஆனால், இவர்களது பெயரால் அரசு பிறப்பிக்கும் ஆணைகள் அனைத்தும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை என்பதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது
சிவில் வழக்குகள் தொடர முடியுமா? இருப்பினும், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் மீது அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த செயல்களுக்காகச் (Personal Capacity) சிவில் வழக்குகளைத் தொடர அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், அதற்குச் சில கடுமையான நடைமுறை நிபந்தனைகள் உள்ளன. வழக்குத் தொடர்வதற்குப் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பே எழுத்துப்பூர்வமான அறிவிக்கையை (Written Notice) அவர்களிடம் நேரில் வழங்க வேண்டும் அல்லது அவர்களது அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அந்த அறிவிக்கையில் வழக்கின் தன்மை, வழக்கிற்கான காரணம், வழக்குத் தொடுப்பவரின் பெயர், முகவரி மற்றும் கோரப்படும் நிவாரணம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த 2 மாத அவகாசம் முடிந்த பின்னரே நீதிமன்றத்தில் சிவில் வழக்கைப் பதிவு செய்ய முடியும்.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எத்தகைய பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன? உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்புப் பிரிவு 361 வழங்கும் அளவிலான தனிநபர் குற்றவியல் பாதுகாப்பு கிடையாது. அதேவேளையில், நீதிபதிகள் அச்சமின்றிப் பணியாற்ற அவர்களது பதவிக்குக் அரசியலமைப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 124(4)-ன் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்க முடியும். மேலும், நீதிபதிகளின் அலுவல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க சட்டப்பிரிவு 121 மற்றும் 211 தடை விதிக்கிறது. நீதிபதிகள் மீது பொய் வழக்குகள் போடுவதைத் தடுக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்அனுமதியின்றி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என்ற நடைமுறை மட்டுமே உள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.பி, எம்.எல்.ஏ) சிறப்புரிமைகள் என்னென்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரிவு 105-ன் கீழும், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பிரிவு 194-ன் கீழும் சிறப்புப் பாதுகாப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் அவைக்குள் பேசுவதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது. அவை நடக்கும் காலத்திலும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன்பும் பின்பும் இவர்களைச் சிவில் வழக்குகளில் கைது செய்ய முடியாது. அவையில் நடக்கும் விவாதங்களை உண்மை மாறாமல் ஊடகங்கள் வெளியிடுவதற்குப் பிரிவு 361A சட்டப் பாதுகாப்பு வழங்குகிறது. இருப்பினும், அவைக்கு வெளியே மக்கள் பிரதிநிதிகள் செய்யும் குற்றவியல் செயல்களுக்கு இத்தகைய பாதுகாப்புகள் எதுவும் பொருந்தாது.
பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குச் சட்ட விலக்குகள் ஏதேனும் உள்ளதா? இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரதமருக்கும், மத்திய-மாநில அமைச்சர்களுக்கும் எவ்விதத் தனிநபர் குற்றவியல் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களைப் போலவே அமைச்சர்களும் நாட்டின் குற்றவியல் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களே ஆவர். ஆனால், குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ அமைச்சர்கள் அளித்த ஆலோசனைகள் என்னவென்று எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. அதேபோல, அரசின் சார்பில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அமைச்சர்களோ அதிகாரிகளோ (பிரிவு 299(2)) அதற்காகத் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார்கள். அமைச்சரவை எடுக்கும் அனைத்து நிர்வாக முடிவுகளும் நீதிமன்றங்களின் ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால், இவர்களுக்குச் சட்டத்திற்கு மேலான அதிகாரம் எதுவும் கிடையாது.

