[ad_1]
தோக்கியோ:
குடிபோதையில் இருந்த விமானி ஒருவரால் மூன்று விமானங்கள் தாமதமடைந்ததற்காக ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) செப்டம்பர் 10ஆம் தேதி (புதன்கிழமை) பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து மன்னிப்பு தெரிவிக்க, ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுக்கோ தோத்தோரி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அன்றைய தினம் ஹவாயியில் அளவிற்கு மீறி மது அருந்தியதால், அந்த விமானி மறுநாள் ஜப்பானின் நகோயாவுக்கு செல்ல இருந்த விமானத்தை இயக்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஜப்பானிய போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது, ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைமைப் பாதுகாப்பு அலுவலர் யூகியோ நககாவாவுக்கு போக்குவரத்து அமைச்சு எழுத்துவழி எச்சரிக்கை கடிதம் வழங்கியது. அவர் செய்தியாளர்கள்முன் தலை குனிந்து மன்னிப்பு கேட்டார்.
முன்னதாக, விமானிகள் மது அருந்திய சம்பவத்தையடுத்து, கடந்த டிசம்பரில் ஜப்பான் ஏர்லைன்ஸ் இரவுப் பணி ஊழியர்கள் மது அருந்த தடை விதித்தது. அந்தச் சம்பவத்தில் மெல்பர்ன்–நரிட்டா விமானப் பயணம் மூன்று மணி நேரம் தாமதமாகியது. அதற்கும் அமைச்சகம் எச்சரிக்கை வழங்கியது.
விமானிகளின் மது அருந்தும் போக்கு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அதனை நிறுவனம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக தலைவர் தோத்தோரி தெரிவித்தார்.