கோலாலம்பூர் :
மலேசியக் குடிநுழைவுத் துறையின் (Immigration Department) அனைத்துக் பணியாளர்களும் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் மிக உயர்ந்த நேர்மையுடன் (Integrity) நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (ஜூலை 21) கொண்டாடப்படும் குடிநுழைவு தினத்தை முன்னிட்டுத் தமது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், நேர்மையைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், திறமையான, மரியாதையான மற்றும் தொழில்முறைச் சேவைகளை வழங்கும்போது இரக்கத்துடனும் (Compassion) பணிபுரிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“குடிநுழைவுத் துறையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் இனிய குடிநுழைவு தின நல்வாழ்த்துகள் என்று கூறிய பிரதமர், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், மக்களுக்குச் சேவை செய்வதிலும், உலக அரங்கில் மலேசியாவின் புகழை உயர்த்துவதிலும் நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்,” எனப் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



