Last Updated:
குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் இருந்த மொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் சேர்த்து 17 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், திடீரென அமைச்சரவையில் இருக்கும் 16 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தனது அமைச்சரவையில் இருந்து 16 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், இன்று அம்மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்-ஐ சந்தித்து புதிய அமைச்சரவையை நியமிக்க ஒப்புதல் கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (17ஆம் தேதி) குஜராத் அமைச்சரவை விரிவாக்கம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே இன்று (16ஆம் தேதி) அமைச்சரவையில் இருந்த முதலமைச்சரை தவிர்த்து மற்ற 16 அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் சுமார் 10 புதியவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், தற்போதைய அமைச்சரவையில் இருந்து பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றம் வரவிருக்கும் 2027 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
October 16, 2025 5:00 PM IST
குஜராத் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா! முதலமைச்சர் பூபேந்திர படேல் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!


