இங்கு உற்பத்தி ஆகும் உப்பானது தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு, வெளி மாநிலம் மற்றும் இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உப்பளத் தொழிலானது இங்கு பலரின் வாழ்வாதாரமாகவே இருந்து வருகிறது. இதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் சார்ந்திருக்கின்றனர். பருவம் சார்ந்த தொழிலான உப்பளத் தொழில் இந்த ஆண்டு துவக்கம் முதலே இயற்கை இடையூறுகளைச் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த போப் ஆண்டவர் யார்… புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்ன..?
20 லட்சம் டன் உப்பு உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் கடந்த வருடம் உப்பு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குஜராத்திலிருந்து தூத்துக்குடிக்குக் கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி சிறு உற்பத்தி சங்க செயலாளர் விஜய் சேகர் கூறுகையில், “தூத்துக்குடி மொத்தம் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தினால் அதிகளவு மழை பொழிந்து உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கடந்த வருடம் 60% உப்பு தான் உற்பத்தி செய்ய முடிந்தது.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டிலும் பிப்ரவரி மாதமே பணி தொடங்கிய நிலையிலும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகியும் மழையின் காரணத்தினால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதனால் விலையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: SI Exam: உதவி ஆய்வாளர் தேர்வுக்கு வெற்றிப்பாதை… குமரி மாவட்ட காவல்துறை வழங்கும் இலவச பயிற்சி…
அதன் காரணத்தினால் இந்த சூழலைச் சமாளிப்பதற்குக் கடல் வழியாகக் குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்து, தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம். வரும் காலங்களில் இதனைத் தவிர்த்து 90% உப்பு உற்பத்தி செய்து விலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
உப்பளத் தொழிலாளர்கள் நிலை குறித்து தமிழ்நாடு உடல் உழைப்பு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “குஜராத்திற்கு அடுப்படியாக உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி தான் இரண்டாவது இடமாக இருக்கிறது. தூத்துக்குடியில் 22 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இதனை நம்பி 60 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
குறிப்பாக ஒரு வருடத்திற்கு 25 லட்சம் டன் உப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆகின்றது. ஆனால் தற்போது குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட உப்பு தொழில் இன்று வரை உப்பளத் தொழில் தொடங்கப்படாத சூழலில் தள்ளப்பட்டுள்ளது. அதனால் இதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்வு வறுமையின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Baralikadu ECO Tourism | பவானி ஆற்றில் மீன் போல குளியல்… சுவையான மீன் வறுவல் சாப்பாடு… சம்மர்ல என்ஜாய் பண்ண பரளிக்காடு விசிட் அடிங்க…
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையின் அடிப்படையில் வருடத்திற்கு ஒரு முறை ரூபாய் 5000 உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இது அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக வாரியத்தில் பதிவு செய்த குடும்பங்களில் ஒருவருக்கு 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்கள் கோரிக்கை உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்பது தான்.
உணவிற்கு மட்டுமின்றி தொழில்துறை தேவைக்கும் உப்பு அவசியமாகிவிட்டது. தற்போது உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகின்றது. இதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இங்கு உப்பளங்கள் பெருக்கப்படாமல் அழிக்கப்பட்டு தான் வருகிறது.
உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடல் ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்ற தேவைகள் கூட நிவர்த்தி அடையாமல் உள்ளது. அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
இதையும் படிங்க: இந்த சம்மரை ஒருகை பார்த்திடலாம்… அழகுடன் ஆரோக்கியம் கொண்ட வெட்டி வேர் ஸ்க்ரீன்…
தமிழ்நாடு அரசு 2023இல் உப்பளத் தொழிலுக்குத் தனி வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது. ஆனால் இன்று வரை அந்த அரசாணை நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. அதனைக் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவசாயம் போல் இதுவும் பருவநிலை சார்ந்த தொழில் தான். ஆனால் உப்பளம் ஆனது சுரங்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் சுரங்கத் துறையிலிருந்து வேளாண் துறைக்கு மாற்ற வேண்டும், வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் உப்பளம் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
April 27, 2025 11:35 AM IST

