Last Updated:
நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைக் குகேஷ் பெற்றார்.
நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை முதல் முறையாக குகேஷ் வீழ்த்தினார்.
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வே நாட்டின் ஃபினான்ஸ்பர்கென் (Finansparken) நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆறாவது சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான குகேஷ் உலகின் முதல் நிலை வீரரான கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் எதிர்கொண்டார்.
கிளாசிக்கல் சுற்றில் பலம் வாய்ந்தவராக அறியப்படும் கார்ல்சன் வழக்கம் போல் இந்த சுற்றிலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். கடைசிக்கட்டத்தில் கார்ல்சன் செய்த தவறுகளைக் குகேஷ் தனக்குச் சாதகமாக மாற்றி வெற்றி பெற்று அசத்தினார். குகேஷின் ஆட்டத்திறனைக் கார்ல்சன் விமர்சித்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் அவரிடமே தோல்வியடைந்ததால் கடும் விரக்தியை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைக் குகேஷ் பெற்றார். இதற்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவும் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாபியானோ கருனா மற்றும் கார்ல்சன் தலா 9.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கின்றனர்.
நார்வே செஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 9.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
June 02, 2025 8:04 AM IST


