கோலாலம்பூர், ஜனவரி 6:
ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் பி-ஹெய்லிங் விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட கீக் தொழிலாளர்களின் திறன் பயிற்சி மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இந்த ஒதுக்கீடு நாட்டின் புதிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கீக் தொழிலாளர்களின் பங்களிப்பிற்கு அரசாங்கம் அளித்துள்ள அங்கீகாரம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் (PTPK) வழியாக வழங்கப்படும் இந்த நிதி, 2025-ஆம் ஆண்டு கீக் தொழிலாளர் சட்டம் மற்றும் 2026 வரவுசெலவுத் திட்ட முன்முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும்.
இந்த புதிய நிதியுதவியின் மூலம் கிக் தொழிலாளர்களுக்கு வெறும் பயிற்சி வாய்ப்புகள் மட்டுமன்றி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியச் சேமிப்புப் பங்களிப்புகளும் உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
வெயிலிலும் மழையிலும் வீதிகளில் அயராது உழைக்கும் இத்தொழிலாளர்கள் இனி பாதுகாப்பு வலை இல்லாத இரண்டாம் தர ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.
தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீக் பொருளாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மலேசியர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்த 100 மில்லியன் ரிங்கிட் நிதி முக்கியப் பங்கு வகிக்கும்.
நவீனப் பொருளாதாரச் சூழலில் கீக் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கவும் மனிதவள அமைச்சு தொடர்ந்து பாடுபடும் என்று அமைச்சர் ரமணன் மீண்டும் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள் மூலம் தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.




