கோத்தா பாரு:
கிளந்தான் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சமூகச் சீர்கேட்டுப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும், அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் மாநில அரசு ஒரு புதிய சிறப்பு முகாமைத்துவக் குழுவை (Special Committee) அமைத்துள்ளது.
அதே வேளையில், நாட்டின் மிக மோசமான குற்றச்செயல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கொண்ட மாநிலம் கிளந்தான் தான் என்று கூறப்படும் அவதூறுகளை மாநில அரசு முற்றாக மறுத்துள்ளது.
இதுகுறித்து கிளந்தான் துணை மந்திரி பெசார் (Deputy Menteri Besar) டத்தோ டாக்டர் முகமட் ஃபத்லி ஹசான் கூறுகையில், இந்த புதிய சமூகச் சீர்கேடு ஒழிப்பு மற்றும் ஒழுக்கக் கண்காணிப்புக் குழுவிற்கு, மாநிலக் கல்வி, உயர்கல்வி, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புக் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் வான் ரோஸ்லான் வான் ஹமாத் தலைமை தாங்குவார் என்று அறிவித்தார்.
இக்குழுவானது, போதைப்பொருள் தடுப்பு, குற்றச்செயல் குறைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இதர சமூக சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொள்ளும் நோக்கில், மாநில மற்றும் கூட்டரசு முகமைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாநில அரசு ஒருபோதும் சமூகப் பிரச்சினைகளை லேசாக எடுத்துக் கொண்டதில்லை. பொதுப் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு போன்றவை அனைத்துத் தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் மீது வைக்கப்படும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை நிராகரித்த டத்தோ ஃபத்லி, அதிகாரப்பூர்வ அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி போதைப்பொருள் தொடர்பான அனைத்துக் குறிகாட்டிகளிலும் கிளந்தான் முதலிடத்தில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“எடுத்துக்காட்டாக, கிளந்தானில் 1,513 போதைப்பொருள் விநியோக வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் சிலாங்கூர் மாநிலத்தில் அது 2,716 ஆக உள்ளது. போதைப்பொருள் என்பது கல்வி, அமலாக்கம் மற்றும் மறுவாழ்வு மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு தேசியப் பிரச்சினையே தவிர, அரசியலாக்கப்படக் கூடாது” என்றார்.
மேலும், எச்ஐவி/எய்ட்ஸ் (HIV/AIDS) பாதிப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளை அவர் முன்வைத்தார். அதன்படி, அதிக எச்ஐவி பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாகச் சிலாங்கூர் (1,062 வழக்குகள்) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் (357), சபா (320), பினாங்கு (256) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஆனால், கிளந்தானில் வெறும் 93 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது மற்ற பல மாநிலங்களை விட மிகக் குறைவாகும்.
அரசியல் லாபத்திற்காக அரசாங்கத் தரவுகளைத் தங்களுக்குத் சாதகமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி (“cherry-picking”), கிளந்தான் மாநிலத்தின் நற்பெயருக்குக் கங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக டத்தோ ஃபத்லி எச்சரித்துள்ளார். பொதுவெளியில் கருத்துரைப்பவர்கள் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
The post கிளந்தானில் போதைப்பொருள் மற்றும் சமூகச் சீர்கேடுகளை ஒழிக்க சிறப்பு வாரியம் அமைப்பு! – துணை மந்திரி பெசார்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

