பாசிர் மாஸ்:
சுங்கை கோலோக் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சட்டவிரோதப் படகுத்துறைகளை அகற்றும் நடவடிக்கையை கிளந்தான் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் மேலும் 96 கட்டமைப்புகளை இடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாசிர் மாஸ் மற்றும் தும்பாட் (Tumpat) மாவட்டங்களில் ஏற்கனவே 25 சட்டவிரோதப் படகுத்துறைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்தம் 223 சட்டவிரோதப் படகுத்துறைகளில், முதற்கட்டமாக அரசாங்க நிலத்தில் உள்ளவை இடிக்கப்படும்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள், வானிலை சீரானதும் மீண்டும் தொடங்கும் எனத் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் டத்தோ முகமட் ஏ. அருவான் அப் அஜிஸ் தெரிவித்தார்.
அரசாங்க நிலத்தில் உள்ள படகுத்துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், தனியார் நிலங்களில் உள்ளவை குறித்து முறையாக விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கை கோலோக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் திட்டத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கடந்த 2024 டிசம்பர் முதல் சட்டவிரோத தளங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமட் உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.




