Last Updated:
2026-27 சீசனின் தனது முதல் போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள பிரிட்டோரியஸ், உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான லுவான்-டிரே பிரிட்டோரியஸ், டி20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் 13 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் CSA டி20 சேலஞ்ச் தொடரில், நைட்ஸ் அணிக்கு எதிராக டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய பிரிட்டோரியஸ், ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனை படைத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் தனிநபர் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற சாதனையைத் தன்வசமாக்கியுள்ளார். இதற்கு முன், 2013-ல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெய்ல் அடித்த 175* ரன்களே உலக சாதனையாக இருந்தது.
பிரிட்டோரியஸ் தனது அதிரடி ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார். வெறும் 24 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், அடுத்த 16 பந்துகளில் (மொத்தம் 40 பந்துகளில்) தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 58 பந்துகளில் 150 ரன்களைக் கடந்து, இறுதியாக 79 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்சர்களுடன் 188* ரன்கள் குவித்தார். டி20 போட்டியில் 200 ரன்கள் (இரட்டைச் சதம்) அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைக்க அவருக்கு வெறும் 12 ரன்களே குறைவாக இருந்தது.
மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக பந்துகளை (79 பந்துகள்) சந்தித்த ஆரோன் பிஞ்ச் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
பிரிட்டோரியஸின் இந்த அசுரத்தனமான பேட்டிங்கால் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. இது CSA டி20 சேலஞ்ச் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச அணியின் ஸ்கோராகும். 268 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நைட்ஸ் அணி, டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டைட்டன்ஸ் தரப்பில் டொனவன் ஃபெரீரா மற்றும் ஜூனியர் டாலா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2026-27 சீசனின் தனது முதல் போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள பிரிட்டோரியஸ், சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.


