டெல்லியைச் சேர்ந்தவர் 48 வயதான அஜய் லம்பா. சுமார் 10 ஆண்டுகளாக டாக்சி டிரைவர்களுக்கு எமனாக வலம் வந்தார் என்றால் அது மிகையில்லை. சிறு வயதில் வறுமையின் பிடியில் சிக்கி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார். 6ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியை விட்டு விலகியவர் அதன்பின் உத்தரபிரதேசத்தின் பரேலி பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அங்குதான் தனது எதிர்கால கூட்டாளிகளான தீரேந்திரா மற்றும் திலீப் நேகி ஆகியோரை சந்தித்திருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து திருட்டு, வழிப்பறி, செயின்பறிப்பு என குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கொலை சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களுக்கு அஜய் லம்பா தலைமை வகித்து வழிநடத்தியிருக்கிறார். இந்த கும்பல் கொலைகளை அரங்கேற்றுவதற்கென்று தனிப் பாணியை கடைப்பிடித்து வந்தனர்.
அஜய் லம்பா தனது கூட்டாளிகளுடன் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் செல்வதற்கு ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுப்பார். செல்லும் வழியில் டிரைவருக்கே தெரியாமல் போதைப் பொருளை டீ, காபியிலோ அல்லது வேறு ஏதேனும் உணவுப் பொருளில் கலந்து கொடுத்து விடுவார். அதை சாப்பிட்டு விட்டு அரை மயக்கத்துக்கு சென்றதும், காரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்று, ஓட்டுநரை சுத்தியலால் தலையில் அடித்து கொல்வது, கத்தியால் கழுத்தில் குத்தி கொல்வது என கொடூரக் கொலைகளை அரங்கேற்றி வந்துள்ளனர்.
அதன் பிறகு, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், உடலை மலைப்பாங்கான பகுதியிலிருந்து வீசிவிட்டு காரை எடுத்துக் கொண்டு நேபாளத்துக்கு சென்று விடுவார்கள். அங்கு இவர்களுக்கு கார் விற்பனை செய்ய டீலர்கள் உள்ளனர். அவர்களிடம் காரை விலைபேசி விற்று விட்டு சில லட்சங்களுடன் ஊர் திரும்பி விடுவார்கள். 2001 ஆம் ஆண்டு முதல், டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான டாக்சி டிரைவர்கள் காணாமல் போவது வாடிக்கையாக ஆரம்பித்தது.
இந்நிலையில், உஷாரான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சீரியல் கில்லர் குறித்த தகவல்கள் கசிய ஆரம்பித்தன. 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு சீரியல் கில்லர் குறித்த தகவல்கள் பரவலாக பொதுமக்களிடம் பேசப்பட்டது. ஆனால் குற்றவாளி அஜய் லம்பா எங்கு போய் பதுங்கினார் என்பது போலீசாருக்குத் தெரியவிரவில்லை. இந்த நிலையில் தான், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா கேட் அருகே அஜய் லம்பாவை அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்தனர்.
லம்பா 2008 முதல் 2018ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக நேபாளத்தில் பதுங்கி இருந்துள்ளார். பின்னர் தனது குடும்பத்துடன் உத்தரகண்டில் உள்ள டேராடூனுக்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. 2020 ஆம் ஆண்டு, இவர் ஒடிசா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த சம்பவத்திலும், 2024ம் ஆண்டு ஒடிசாவின் பெஹ்ராம்பூரில் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்திலும் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் சாதுர்யமாக தனது அடையாளங்களை மறைத்திருக்கிறார் அஜய் லம்பா.
இவரது கூட்டாளிகளில் ஒருவரான தீரேந்திர திலீப் பாண்டே ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபரான தீரஜ் தலைமறைவாக இருக்கிறார். டெல்லி போலீசாரால் சீரியல் கில்லர் அஜய் லம்பா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு சிக்கியிருக்கிறார். அவரால் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
July 07, 2025 8:57 PM IST
கிரைம் – த்ரில்லர் படங்களை மிஞ்சும் கொடூரம்.. 24 வருடங்களுக்கு பிறகு சிக்கிய சீரியல் கில்லர்.. பகீர் கிளப்பும் பின்னணி!