Last Updated:
அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது மற்றும் அடிக்கடி லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடன் என்பது நம்முடைய இலக்குகளை அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் கருவிகளில் ஒன்றாகும். உங்களுடைய சேமிப்புகளை உடனடியாக மொத்தமாக பயன்படுத்தாமலேயே செலவுகளை சமாளிப்பதற்கு கடன்கள் உதவுகின்றன. மாறாக நாளடைவில் வட்டியோடு சேர்த்து அந்த கடனை நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள். ஆனால், தவறான வழியில் கடனை பயன்படுத்தும்போது, அதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.
“கிரெடிட் ஹங்கர்” என்பது கிரெடிட் கார்டுகள் மற்றும் லோன்கள் போன்ற கடன் கருவிகளை ஒரு குறுகிய காலத்தில் அடிக்கடி விண்ணப்பிக்கும் ஒரு நபரின் நடத்தையை குறிக்கிறது. இதனால், கிரெடிட் பியூரோ உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் “கிரெடிட் ஹங்கர்” என்ற அபாயக் கொடியை குறிப்பிடும்.
லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகிய இரண்டும் மிக முக்கியமான கருதுகோள்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் விண்ணப்பிக்கும்போதும், உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் ஹார்ட் என்குயரி செய்யப்படுகிறது. இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
அடிக்கடி நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்தால் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான ஹார்ட் என்குயரிகள் செய்யப்படுகின்றன. இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு மோசமான சேதம் ஏற்படுகிறது. நாளடைவில் உங்களுடைய கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல் உருவாகிறது. கடன் வழங்குபவருடைய கண்களில் நீங்கள் ‘கடன் பசி’ கொண்ட ஒரு நபராக காணப்படுவதே இதற்கு காரணம். ஒருவேளை தப்பித்தவறி உங்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டாலும் கூட, அதற்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படும்.
கிரெடிட் ரிப்போர்ட்டில் “கிரெடிட் ஹங்கர்” கொடி வராமல் தடுப்பது எப்படி?
- ஒரு குறுகிய காலத்தில் அதிக லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்.
- உங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச உச்சவரம்பை 30 சதவீதத்திற்கும் குறைவாக பயன்படுத்துவதன் மூலமாக கிரெடிட் பயன்பாட்டு விகிதம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
- கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு டியூ பணத்தை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவும்.
- உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை வழக்கமான முறையில் சரிபார்த்து, அதில் ஏதேனும் தவறான தகவல்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடவும்.
எனவே, எச்சரிக்கையாக திட்டமிட்டு, சரியான முறையில் பொருளாதாரத்தை நிர்வகிப்பதன் மூலமாக கிரெடிட் ரிப்போர்ட்டில் “கிரெடிட் ஹங்கர்” என்ற கொடி வராமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
June 28, 2025 5:49 PM IST