இந்த EMI வசதி மூலமாக பெரிய பேமெண்ட்களை சிறிய சமாளிக்க கூடிய இன்ஸ்டால்மென்ட்களாக பிரித்து செலுத்தலாம். மேலும் உங்களுடைய பொருளாதார நிலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உங்களால் எவ்வளவு தவணைத் தொகை செலுத்த முடியுமோ அதற்கேற்றவாறு தவணை காலத்தையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வகையில் இந்த ஆப்ஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட் கார்டு EMI வசதியானது ஒரு சில பின்னடைவுகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த பதிவில் கிரெடிட் கார்டு EMI பெறுவதால் நமக்கு கிடைக்கும் நன்மை தீமைகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு EMI என்றால் என்ன, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்?
கிரெடிட் கார்டு EMI என்பது உங்களுடைய கிரெடிட் கார்டில் நீங்கள் செய்த ஒரு பெரிய செலவை சிறிய, நிலையான மாத திருப்பி செலுத்தும் தொகையாக மாற்றுகிறது. இந்த கடனை செலுத்துவதற்கு முன்கூட்டியே ஒரு கால அளவு அமைக்கப்படுகிறது. மொத்த தொகையையும் ஒரேடியாக செலுத்துவதற்கு பதிலாக முதல் தொகை மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து ஒவ்வொரு மாதமும் சிறிய அளவில் செலுத்தி வருவீர்கள்.
கிரெடிட் கார்டு EMIகள் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்:
*கிரெடிட் கார்டு EMI என்பது விலை அதிகமான ஒரு பொருளின் செலவை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செலுத்துவதற்கு பிரித்துக் கொடுக்கிறது. இதனால் உங்களுடைய பட்ஜெட்டிற்குள்ளாக செலவுகளை எளிமையாக நிர்வகிக்கலாம்.
*கிரெடிட் கார்ட் EMI ஆப்ஷன்கள் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
*பல வியாபாரிகள் மற்றும் வங்கிகள் நோ காஸ்ட் EMI ஆப்ஷனை வழங்குகின்றனர். இதனை பயன்படுத்தும் போது நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த தேவையில்லை.
*ஒரு சில வங்கிகள் EMI டிரான்ஸாக்ஷன்களுக்கு ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக் அல்லது டிஸ்கவுண்டுகளை வழங்குகின்றனர்.
கிரெடிட் கார்டு EMIகளின் பின்னடைவுகள்:
*கிரெடிட் கார்ட் EMIகள் வழக்கமாக வட்டியோடு வசூல் செய்யப்படும். இதனால் ஒரு பொருளின் மொத்த செலவானது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கலாம்.
*கடனை நீங்கள் முழுவதுமாக செலுத்தி முடிக்கும் வரை EMI தொகையானது உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் வரம்பை குறைத்து விடும். இதனால் கார்டை பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய டிரான்சாக்ஷன்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் வரலாம்.
*ஒரு சில EMI ஆப்ஷன்களில் பிராசசிங் கட்டணங்கள், GST அல்லது பிரீ-பேமெண்ட் செய்வதற்கான கட்டணங்கள் அடங்கும். பெரும்பாலான சூழ்நிலைகளில் இது மாதிரியான கட்டணங்கள் முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்கப்படாது.
*EMIகளை செலுத்தி கொள்ளலாம் என்பதற்காக சிலர் அளவுக்கு அதிகமாக கிரெடிட் கார்டுEMIகளை பயன்படுத்துவதுண்டு. இதனால் நாளடைவில் கடனானது அதிகரித்து, கடன் வலைக்குள் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
எனவே கிரெடிட் கார்டு EMI ஆஃபர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது அவசியம். மேலும் அதனை பயன்படுத்துவதற்கு முன்பு அது குறித்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
July 31, 2025 2:36 PM IST