இன்றைய நவீன காலத்தில், கிரெடிட் கார்டுகள் என்பது பலரின் அன்றாட தேவைகளைப் போக்கும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டன. அன்றாடச் செலவுகள், அவசர தேவைகள், ஆன்லைன் ஆர்டர்கள் என பல்வேறு தேவைகளுக்கு, பலரும் கிரெடிட் கார்டுகளையே நம்பி இருக்கின்றனர். ஆனால், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் திடீரென உயிரிழந்து விட்டால், அவர் விட்டுச் சென்ற நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியது யார் என்கிற கேள்வி பல குடும்பங்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில், “கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் திடீரென இறந்தால், அவரது குடும்பத்தினர் அந்தக் கடனைச் செலுத்த வேண்டுமா?” என்கிற கேள்விக்கு ரிசர்வ் வங்கி (RBI) தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
கிரெடிட் கார்டு என்பது பிணையமற்ற கடன் (Unsecured Loan) ஆகும். அதாவது, வீடு, நிலம், தங்கம் போன்ற எந்தச் சொத்தையும் அடமானமாக வைத்து இந்தக் கடன் வழங்கப்படுவதில்லை. வங்கிகள், அட்டைதாரரின் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டே கிரெடிட் கார்டை வழங்குகின்றன.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இந்தக் கடனுக்கான முழுப் பொறுப்பும் அட்டைதாரருக்கே உரியது. எனவே, அட்டைதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினரை அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளை, அவர்களுடைய தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பணம் செலுத்துமாறு வங்கிகள் கட்டாயப்படுத்த முடியாது.

இல்லை. கிரெடிட் கார்டு வைத்திருந்த நபர் இறந்துவிட்டார் என்பதற்காக, அவர் பயன்படுத்திய நிலுவைத் தொகை தானாகவே தள்ளுபடி செய்யப்படாது. வங்கிகள், இறந்தவரின் சொத்துக்களிலிருந்து மட்டுமே நிலுவைத் தொகையை வசூலிக்க சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றுள்ளன. இதில், வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு, நிலையான வைப்புத்தொகைகள், பங்குகள் மற்றும் முதலீடுகள், தங்கம், நிலம் அல்லது வீடு போன்ற சொத்துக்கள் அடங்கும். இந்தச் சொத்துக்கள் வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு முன்பாக, நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு.
சட்டப்பூர்வ வாரிசுகள் பரம்பரைச் சொத்துகளைப் பெற்றிருந்தால், அந்தச் சொத்துகளின் மதிப்புக்குள் மட்டுமே வங்கிகள் நிலுவைத்தொகையை வசூலிக்க சட்டப்பூர்வ உரிமை பெறுகின்றன.
உதாரணமாக, ஒரு நபரின் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை ரூ.7 லட்சம் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே இருந்தால், வங்கி ரூ.5 லட்சம் வரை மட்டுமே வசூலிக்க முடியும். மீதமுள்ள ரூ.2 லட்சம் சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இறந்தவரின் பெயரில் எந்தச் சொத்தும் இல்லாவிட்டால், வங்கிக்கு வசூலிக்க சட்டப்பூர்வ வழி எதுவும் இல்லை. அத்தகைய கடன், வங்கியின் கணக்குகளில் செயல்படாத சொத்து (NPA) ஆக வகைப்படுத்தப்படும்.
இந்த விஷயத்தில் சில விதிவிலக்குகளும் உள்ளன. ஜாய்ண்ட் கிரெடிட் கார்டு இருந்தால், உயிருடன் இருக்கும் அட்டைதாரர் முழு நிலுவைத் தொகைக்கும் பொறுப்பாளராக இருப்பார். கிரெடிட் கார்டுக்கு உத்தரவாதம் அளித்தவர் (Guarantor) உயிருடன் இருந்தால், வங்கி அவரிடமிருந்து தொகையை வசூலிக்கலாம்.
கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களைத் தவிர்க்க, குடும்பத்தினர், உடனடியாக வங்கிக்குத் தகவல் அளிக்க வேண்டும். இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், கிரெடிட் கார்டை முடக்க அல்லது ரத்து செய்யக் கோர வேண்டும். இவ்வாறு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், தேவையற்ற சட்ட சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
கடனை மீட்க முகவர்கள் தொந்தரவு செய்தால்?
- சில சந்தர்ப்பங்களில், கடன் மீட்பு முகவர்கள் குடும்பத்தினரை மிரட்டவோ, தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பணம் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவோ முயற்சிக்கலாம். ஆனால், இது சட்டவிரோதமானதாகும்.
- அப்படி நடந்தால், குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கலாம். ரிசர்வ் வங்கியின் வங்கி குறைதீர்ப்பாளரிடம் (Banking Ombudsman) முறையிடலாம் அல்லது கடன் ஆயுள் காப்பீடு உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
- சில பிரீமியம் கிரெடிட் கார்டுகள் கடன் ஆயுள் காப்பீடு (Credit Life Insurance) வசதியுடன் வருகின்றன. அட்டைதாரர் விபத்து அல்லது குறிப்பிட்ட காரணங்களால் உயிரிழந்தால், அந்தக் காப்பீடு பாலிசி, அதன் வரம்புகளுக்குள்ளான நிலுவைத் தொகையைச் செலுத்தும். எனவே, அத்தகைய காப்பீடு உள்ளதா என்பதை குடும்பத்தினர் சரிபார்ப்பது அவசியம்.
- எனவே, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அவர்களது சொந்த பணத்திலிருந்து கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கடன் வசூல் என்பது இறந்தவரின் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது.
- இந்த விதிகளைப் பற்றிய தெளிவான புரிதல், தேவையற்ற பயம், மனஅழுத்தம் மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க குடும்பங்களுக்கு பெரிதும் உதவும்.

