அமெரிக்கா மட்டுமல்ல சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் கிரீன்லாந்து மீது ஒரு கண் இருக்கிறது. சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், 2018-ம் ஆண்டு கிரீன்லாந்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு 2019-ல் திரும்பப் பெறப்பட்டது.
குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை தனக்கான ஒரு பாதுகாப்பு உத்தியாகவே கட்டமைத்திருக்கிறது. எனவே, கிரின்லாந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் போட்டியிடுகின்றன.
இதுதவிர, சமீபத்திய ஆய்வுகளின்படி, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் ஆபத்தான விகிதத்தில் பனிக்கட்டிகள் உருகியுள்ளது தெரியவந்திருக்கிறது. 1990-களில் இருந்து, இந்த இரண்டு பகுதிகளிலும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் நீரில் கரைந்துள்ளது.
இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, பனி உருகுவதால் புதிய கப்பல் வழித்தடங்களும், ராணுவப் பாதைகளும் உருவாகும். எனவே, கிரீன்லாந்து போக்குவரத்துக்கும் உகந்த பகுதியாக உருவாகி வருகிறது.
எனவே, கிரீன்லாந்து என்ற ஒரு பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்கா கனடா, மெக்சிகோ, கௌதமாலா, பனாமா உள்ளிட்ட நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், கியூபா, ஹைட்டி, ஜமைக்கா போன்ற கரீபியன் தீவுகளில் தன் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த முடியும் என அதிபர் ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார்.

