ட்ரம்ப் – கிம் சில ஒற்றுமைகள்
ஆசிய நாடுகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதி வரும் ஐசக் ஸ்டோன் ஃபிஷ், “ட்ரம்புக்கும் கிம்முக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.” என்கிறார்.
“அவர்கள் இருவரும் வளமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருவரும் தன் தந்தையின் நிழலில் வளர்வதை பெரிதாக ரசிக்காதவர்கள். இருவரும் தாங்கள் விரும்பியது மட்டும்தான் நடக்க வேண்டும் என விரும்புபவர்கள். தங்கள் எதிரிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்தவர்கள்,” என ஒரு கட்டுரையில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டு உள்ளார்.
ஜனநாயக நாட்டை சேர்ந்த ட்ரம்ப், தான் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களுக்கு மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பமும் தராமல் பணியைவிட்டு பல முறை நீக்கி இருக்கிறார். சர்வாதிகார நாட்டின் அதிபரான கிம், அப்படியானவர்களை உலகத்தை விட்டே நீக்கி இருக்கிறார்.
தன் கருத்துகளுக்கு உடன்படாதவர்களை ட்ரம்ப் ட்விட்டரில் கிண்டல் செய்வார். கிம் அவர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்புவார். குவிந்திருக்கும் அதிகாரத்திற்கு ஏற்றவாரு எதிர்வினை இருக்கிறதே தவிர, நோக்கம் ஒன்றுதான். சொல்வதை கேள். எதிர்த்து பேசாதே. அவ்வளவுதான்.
சரி. மீண்டும் தலைப்புக்கு வருகிறேன். இனி வட கொரியா என்னவாகும்?

