கிண்ணியா பிரதேச ஊடகவியலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதனை தலைமை தாங்கி நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முறையாக அரச அங்கீகார அடையாளத்துடன் இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஊடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் இதற்காக உள்வாங்கப்பட வேண்டும். இதற்காக பொருத்தமான அரச காணியுள்ள இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் பஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும், கிண்ணியா பிரதேசத்துக்கு மின் பொறியியலாளர் அத்தியட்சகர் காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிண்ணியாவில் இருந்து கொண்டு செல்லப்படுகின்ற மணலுக்கு பிரதேச சபைக்கு உரிய வருமானத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, இந்த விடயத்தை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு கொண்டு செல்வதற்கும் முடிவு செய்யப்பட்டது.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இட நெருக்கடியை தீர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கிண்ணியா மாத்திய நிருபர்

