மேதினத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு நீண்டது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை தொழிற்சங்க இயக்கங்களின் மையமாக விளங்கியது. இந்தியாவில் முதன்முதலாக எட்டு மணி நேர வேலை உரிமைக்காக போராடி வெற்றி பெற்று, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பே, நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க முயற்சித்தார். “உழைப்புக்கு மதிப்பளிக்க வேண்டுமெனில், முதலில் உழைப்பவருக்கு மதிப்பளிக்க வேண்டும்,” என்ற அண்ணாவின் கூற்றின்படி, 1967-ல் தி.மு.க ஆட்சியில் மே 1 ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. பின்னர், முதலமைச்சர் கலைஞர் இதை சட்டமாக்கினார். மேலும், வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, கலைஞரின் கோரிக்கையால் இந்தியா முழுவதும் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

