“இனி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் யாரும் சட்டத்திற்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால், வெளிநாட்டு மாணவர்கள் சிறையிலிடப்படுவார்கள்… அல்லது அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்பப்படுவார்கள். உள்நாட்டு மாணவர்கள் நிரந்தரமாக கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது குற்றத்திற்கு ஏற்ப கைது செய்யப்படுவார்கள்” என்று இந்த மாத தொடக்கத்தில் சட்டம் போட்டிருந்தது ட்ரம்ப் அரசு.
இதை மீறி, கடந்த மார்ச் 5-ம் தேதி, காஸாவுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் இந்திய மாணவியான ரஞ்சனி ஶ்ரீனிவாசன். இதனையடுத்து, ரஞ்சனி தானாகவே கடந்த 11-ம் தேதி அமெரிக்காவில் இருந்து கிளம்பியுள்ளார். அந்த வீடியோவை தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டி நோயம்…
“அமெரிக்காவில் படிக்கவும், தங்கவும் விசா கிடைப்படது என்பது சலுகை ஆகும். ஆனால், நீங்கள் வன்முறையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும்போது, அந்த சலுகை ரத்து செய்யப்பட வேண்டும். நீங்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது.
அப்படி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தீவிரவாத அனுதாபி தானாகவே சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி ஆப்பை பயன்படுத்தி நாட்டை விட்டு கிளம்பியுள்ளது சந்தோஷமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ரஞ்சனி ஶ்ரீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, ட்ரம்ப்பின் அரசு சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்ற எப்படி நடவடிக்கை எடுத்து வருகிறதோ, அதே மாதிரி சட்டத்திற்கு எதிராக நடப்பவர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.