ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த ‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, “அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




