Last Updated:
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி போலீசார் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மருத்துவர் முஜாமில் ஷகீல் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து கடந்த 9 ஆம் தேதி சுமார் மூவாயிரம் கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 350 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பேட்டரிகள், டைமர்கள் உட்பட மூலப் பொருட்களும் சிக்கின. அடுத்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, ஃபரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நவ்காம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் மொத்த வெடி பொருட்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் வெடிபொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக, காவல் துறை அதிகாரிகள், தடய அறிவியல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் அங்கிருந்தனர். அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது.
சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் காவல் நிலையமே தரைமட்டமாகியுள்ளது. சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கர வெடிச் சத்தம் கேட்டதுடன், அருகில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற அதிர்வு ஏற்பட்டதால், கதவுகள், ஜன்னல்கள் ஆட்டம் கண்டன.
நள்ளிரவில் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்ததாக எண்ணி, தூக்கத்தில் இருந்து எழுந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் நிகழ்விடத்திலேயே 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 6 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தின் பின்னணியில் ஏதும் சதிச் செயல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், காவல் நிலையத்தில் ஏற்பட்டது எதிர்பாராத வெடிவிபத்து தான் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்ததில் பெரும்பான்மையினர் போலீஸ்காரர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினர் எனவும் கூறப்பட்டுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது-
இந்நிலையில், ஃபரிதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களின் மாதிரியை சேகரிக்கும் போது ஸ்ரீநகரில் நிகழ்ந்த விபத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
Jammu and Kashmir
November 15, 2025 6:22 PM IST


