Last Updated:
கணவரை பார்ப்பதற்காக ஜெய்ப்பூருக்கு கால் டாக்ஸி பிடித்து அர்ச்சனா சென்று வந்துள்ளார். இதன் மூலம் கார் ஓட்டுநர் ரிஷப் சர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான கர்ணவ் கத்ரி. இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அர்ச்சனா அரோரா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பிரபல தனியார் வங்கியின் மண்டல தலைவராக உள்ள கர்ணவ், ஜெய்ப்பூரில் பணியாற்றி வருகிறார். அல்வாரில் இருந்து கணவரை பார்ப்பதற்காக ஜெய்ப்பூருக்கு கால் டாக்ஸி பிடித்து அர்ச்சனா சென்று வந்துள்ளார். இதன் மூலம் கார் ஓட்டுநர் ரிஷப் சர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இதையடுத்து கணவனை பார்த்துவிட்டு வருவதாக கூறி ரிஷப் காரில் அடிக்கடி இளம்பெண் உலா வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது ரகசிய காதலனை கரம் பிடிக்க அர்ச்சனா திட்டம் போட்டுள்ளார். அதன்படி கடந்த 2025 ஆம் ஆண்டு0 செப்டம்பர் மாதம் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தனது இளைய மகனையும் அழைத்துக் கொண்டு ரகசிய காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் அவரின் கணவர் கர்ணவ் போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன், ஆடியோ ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். அந்த ஆடியோவைக் கேட்டு போலீசாரே ஆடிப்போயுள்ளனர். அதில் இளம்பெண் அர்ச்சனா, தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவரின் கதையை முடிக்க திட்டமிட்டது அம்பலமானது. ஜெய்ப்பூருக்கு காரில் அழைத்துச் செல்லும்போது தீர்த்துக்கட்ட சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும், கணவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். தனக்கு 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
தவறும்பட்சத்தின் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அத்துடன், குழந்தைகளையும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரகசிய காதலனை கரம் பிடிப்பேன் எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் அர்ச்சனா மற்றும் அவரின் காதலனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிய கணவனை, இளம்பெண் தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய ஆடியோ வெளியாகி ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


