Last Updated:
வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து காட்சிப் போட்டியில் விளையாட பிரேசிலின் ரொனால்டினோ, ரிவால்டோ உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சென்னை வந்துள்ளனர்.
ரொனால்டோ சீனியர், ரொனால்டினோ, ரிவால்டோ போன்ற ஜாம்பவான்களை தெரியாத கால்பந்து ரசிகர்கள் இருக்கவே முடியாது. அவர்களை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என எண்ணிய ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட அரிய வாய்ப்பு சென்னை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து அணிகள் (Brazil Legends and India All Stars) மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து காட்சிப் போட்டியில் விளையாட பிரேசிலின் ரொனால்டினோ, ரிவால்டோ உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் சென்னை வந்துள்ளனர்.
சென்னையில் மார்ச் 31 மற்றும் ஏப்.1ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கால்பந்து கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. கால்பந்து விளையாட்டை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது, ஒரே குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட நோக்கத்தோடு நடைபெறும் இந்த கருத்தரங்கில் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் வீரர்களிடம் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு முன் காட்சிப் போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் – இந்தியன் ஆல் ஸ்டார்ஸ் அணியும் சென்னை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று (மார்ச் 30ம் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: சர்வதேச டேபிள் டென்னிஸில் பல்வேறு பதக்கங்களை வென்ற தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு பெற்றார்
2002ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் லெஜண்ட்ஸ் ரொனால்டினோ, ரிவால்டோ, லூசியோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்பது கால்பந்து ரசிகர்கள், குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியன் ஆல் ஸ்டார்ஸ் அணியில் தமிழ்நாடு கதாநாயகன் சண்முகம் வெங்கடேஷ், மோகன் ராஜ், தர்மராஜ், இந்திய நட்சத்திர வீரர்களான ஹூசைன், கரன்சீத் சிங், அல்விடோ, சையது ரஹீம் உள்ளிட்டோர் போட்டியில் பங்கேற்கின்றனர்.
March 30, 2025 3:23 PM IST


