இன்றைய காலத்தில் கிராமப்புறம் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களும் கால்நடைகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் கால்நடைத் தீவனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கால்நடைகளின் பெருக்கத்திற்கேற்பக் கால்நடைத் தீவனங்கள் சத்து மிக்கதாகவும், இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறதா என்ற ஐயம் கால்நடை வளர்ப்போர் மனதில் எழாமல் இல்லை. இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கால்நடைத் தீவனங்களைத் தேடி விரும்பி வாங்குகின்றனர்.
அப்படி கால்நடை வளர்ப்போர் விரும்பி வாங்கும் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அதிலும் இதை ஒரு பெண் நிர்வகித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இதையும் படிங்க: தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா… கோலாகலமாக நடந்த சப்பர பவனி…
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே இந்த கால்நடைத் தீவனத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் அன்னபூரணி. இவர் முதுநிலை வணிக நிர்வாகத்தில் ஹெச்ஆர் (MBA HR) பட்டப்படிப்பு முடித்து விட்டு சில காலங்கள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆடு, மாடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளின் மீது இவர் கொண்ட பற்றினால் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு மாட்டுத்தீவனங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.
அதனால் ஐடி வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான பழனிக்கு வந்து இயற்கை மாட்டுத் தீவனம் உற்பத்தியைத் தொடங்கியுள்ளார். இவர் இந்த தொழிலைத் தொடங்கி 5 வருடங்கள் ஆகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து இயற்கை மாட்டுத் தீவனம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது குறித்து அன்னபூரணி கூறுகையில், “நாங்கள் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு மாட்டுத் தீவனம் உற்பத்தி செய்கிறோம். நாங்கள் தற்போது ஏழு வகையான தீவனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மாட்டத் தீவனம் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் மற்றும் கேரளா, மலேசியா போன்ற இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. யூரியா போன்ற பல வகையான ரசாயனங்களைக் கலக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு இந்த மாட்டுத் தீவனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.
இதையும் படிங்க: பீடி சுற்றும் பெண்களுக்கு புது வேலைவாய்ப்பு.. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு விக் தயாரிப்பு
கலப்பு தீவனம், குச்சி தீவனம், கோதுமை நைஸ் தவிடு, பொட்டு தவிடு, சிஎப்சி பிளஸ், மக்காச்சோளம் தவுடு, கோழித் தீவனம் சேர்த்து ஏழு வகையான தீவனங்கள் உற்பத்தி செய்து வருகிறோம். கலப்புத் தீவனத்தில் பார்த்தோம் என்றால் மக்காச்சோளம் மாவு, சோள மாவு, பொட்டு வகைகளில் துவரம் பொட்டு உளுந்தம் பொட்டு போன்றவை சேர்த்து உற்பத்தி செய்கிறோம்.
தவுடு வகைகளில் மரவள்ளித் தவடு, சோயா தவிடு, கோதுமை தவிடு இதெல்லாம் சேர்த்துத் தான் இயற்கையாகத் தீவனம் தயாரிக்கிறோம். இந்த இயற்கை தீவனம் மாடுகளுக்கு மிக ஆரோக்கியத்தைத் தருகின்றது. இந்த கோதுமை தவிடு, கோதுமை நைஸ் தவிடு நார்ச்சத்துகள் மிகுந்தவையாகும்.
மக்காச்சோளம் சைலேஜ் பார்த்தீர்கள் என்றால் வயல்கள் இல்லாதவர்களுக்கு 70 நாள் பயிரை அறுவடை செய்து அதனை அரைத்து விற்பனை செய்யப்படுகிறது, இது பச்சை தீவனமாகும் . மேலும் கடந்த மூன்று மாதங்களாகக் கோழித் தீவனமும் செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு குறைவாம்
ஆரம்பக் காலத்தில் நாங்கள் இதனை ஆரம்பிக்கும் போது நிறையக் கஷ்டங்களைக் கடந்து தான் வந்தோம். மூலப்பொருட்கள் கிடைப்பதற்கும் அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மிகக் கடினமாகத் தான் இருந்தது. பின்பு படிப்படியாக இந்த நுட்பத்தையும் அறிந்து எங்களை மேம்படுத்தினோம். அதனால் எங்களுக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர். இளைஞர்கள் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினால் இந்த தொழிலில் சாதிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
.