அத்துடன், முறையான லேபிள்கள் இல்லாத சோப்பு, பேஸ் வாஷ், ஷாம்பு, கிரீம்கள் மற்றும் தலைமுடி எண்ணெய்கள் உட்பட 280க்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தரமற்ற அழகுசாதனப் பொருட்களைச் சேமித்து வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு 13 இல் உள்ள நிறுவனம் ஒன்றுக்கும் அதன் உரிமையாளருக்கும் மொத்தம் 1,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), ஓரியன்ஸ் இன்டர்நேஷனல் பிசினஸ் (பிரைவேட்) லிமிடெட் (Orience International Business (Pvt) Ltd) நிறுவனத்துக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
குறித்த நிறுவனம் விற்பனைக்காகக் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்துகளை வைத்திருந்தமை, காலாவதியான பொருட்களை அழித்ததற்கான பதிவுகளைப் பேணாதமை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை (MRP), இறக்குமதியாளர் விவரங்கள் போன்ற கட்டாயத் தகவல்கள் இல்லாத சோப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைக் கொண்டிருந்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த மே மாதம் 20ஆம் திகதின்று நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, Nephrofit, Dolacare, Asparose, Triphala மற்றும் Ashwagandha போன்ற 640க்கும் மேற்பட்ட காலாவதியான ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் மருந்துகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், முறையான லேபிள்கள் இல்லாத சோப்பு, பேஸ் வாஷ், ஷாம்பு, கிரீம்கள் மற்றும் தலைமுடி எண்ணெய்கள் உட்பட 280க்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மொத்தமாக சுமார் 920 பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன.
இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (04) விசாரணைக்கு வந்தபோது, நிறுவனமும் அதன் உரிமையாளரும் ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம், உரிமையாளருக்கும் சேர்த்து மொத்தம் 1,00,000 ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்தது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
காலாவதியான மருந்துகள் அல்லது லேபிள்கள் இல்லாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற துரித இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, முறைப்பாடு செய்யுமாறு, நுகர்வோர் விவகார அதிகாரசபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

