International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கி 9 நாட்களாக உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 9 நாட்கள் தண்ணீர், உணவு ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும், எப்படியோ போராடி இருவரும் சுமார் 9 நாட்கள் உயிரை பிடித்து கொண்டு இருந்துள்ளனர். மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த வாரம் மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீர் ஏரியில் ஏற்பட்ட உடைப்பே இதற்கு காரணமாகும். இந்த வெள்ளத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

9 நாட்களுக்கு பிறகு மீட்பு
இந்த சூழலில் தான் நீர்மின் நிலையத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். திரிசூலி-3A நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியர் சஞ்சய் சா, அந்த 9 நாட்களாக இருட்டில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையே போராடியதாக தெரிவித்துள்ளார். பயத்தில் தொடர்ந்து கிருஷ்ணா மந்திரத்தை உச்சரித்தபடியே நம்பிக்கையுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு தொழிலாளரான கபீர் மகர்ஜானும் சஞ்சய் சாவுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.
நேபாளம்- திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், திரிசூலி ஆற்றின் கரையோரம் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் 900க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் ஏற்பட்டபோது திரிசூலி-3A நீர்மின் திட்டத்தில் சுமார் 40 முதல் 45 தொழிலாளர்கள் இருந்ததாக சஞ்சய் சா தெரிவித்துள்ளார்.
யார் அவர்?
திட்டத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பாளராக இருந்த அவர், வெள்ளநீரும் அதனுடன் வந்த சேறும், குப்பைகளும் சுரங்கத்துக்குள் வேகமாக புகுந்தபோது மற்ற தொழிலாளர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் மேலும், “கட்டுப்பாட்டு அறைக்கு நான்தான் இன்சார்ஜ். எனவே அனைவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது” என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவர் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டார். சஞ்சய் மற்றும் கபீர் சுரங்கத்தின் வாயிலில் இருந்து சுமார் 170 மீட்டர் தொலைவில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் 3 அல்லது 4 பேர் மட்டுமே இருந்ததாக சஞ்சய் தெரிவித்துள்ளார். இருப்பினும், சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 9 நாட்கள் சுரங்கத்துக்குள் எப்படி உயிர் பிழைத்தார் என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சய், தொடர்ந்து ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
தப்பியது எப்படி
நீண்ட நாட்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த போதிலும் இருவரும் உயிருடன் இருந்ததுள்ளனர். உடலில் ஓரு சில பாதிப்புகள் இருந்த போதிலும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுரங்கம் முழுமையாக நீரில் மூழ்கிய போதிலும், ஆங்காங்கே காற்று பாக்கெட்கள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே இவர்களால் சுமார் 9 நாட்கள் தப்பி பிழைக்க முடிந்துள்ளது.
மகிழ்ச்சி
இன்று வெள்ளிக்கிழமை மீட்பு பணியாளர்கள் சேறும் சகதியும் படிந்த நிலையில் சஞ்சய் மற்றும் கபீரை சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். சஞ்சய் வெளியே கொண்டு வரப்பட்டபோது, மீட்புக் குழுவினர் கொண்டாடினர். கபீர் மகர்ஜானின் மனைவி ஹிரா ஷோபாவுக்கும் இது மிகுந்த உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. 9 நாட்களுக்கு பிறகு கணவர் உயிருடன் ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வரப்பட்டதை பார்த்த அவர், “அவருக்கு 2வது வாழ்க்கை கிடைத்துள்ளது. இது ரொம்பவே சந்தோஷம். இந்த நாளை மறக்கவே மாட்டோம்” என்றார்.
சஞ்சய் மற்றும் கபீர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் இன்னும் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



