Last Updated:
விலங்குகளுக்கு இந்த மருந்தை அளிக்கும் போது, அவை நோயிலிருந்து விரைவாகக் குணமடைந்ததுடன், பிறருக்கு நோயைப் பரப்பும் கால அளவும் கணிசமாகக் குறைந்தது
காற்றின் மூலம் பரவும் தட்டம்மையை தடுக்கும் வகையில் விஞ்ஞானிகள் புதிய ஆன்டி வைரல் மாத்திரைகளை உருவாக்கியுள்ளனர்.
உலகின் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் நோய்களில் ஒன்றான தட்டம்மை பாதிக்கப்பட்ட நபர் இருமினாலும், தும்மினாலும் அல்லது மூச்சு விட்டாலும் காற்றில் வெளியாகும் துளிகள் மூலம் எளிதில் பரவக்கூடியது. தடுப்பூசிகள் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற சூழலில், தட்டம்மை போன்ற வைரஸ்கள் காற்றிலும் நேரடித் தொடர்பிலும் பரவுவதைத் தடுக்கும் புதிய பரிசோதனை ஆன்டிவைரல் மாத்திரையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் GHP-88310 என்ற பரிசோதனை ஆன்டிவைரல் மருந்தை உருவாக்கி ஆய்வு செய்தனர். இந்த மருந்து, வைரஸ்கள் உடலுக்குள் பெருகத் தேவையான ‘பாலிமரேஸ்’ என்ற என்சைமை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த என்சைம் செயல்மிழக்கும் போது வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போகிறது.
மனிதர்களின் தட்டம்மை நோயைப் போன்றே பாதிப்பை ஏற்படுத்தும் ‘கேனைன் டிஸ்டெம்பர்’ வைரஸால் பாதிக்கப்பட்ட ஃபெரெட்ஸ் அதாவது கலப்பின விலங்குகளில் இந்த மருந்து சோதிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே இந்த ஆன்டிவைரல் மருந்தை வழங்கியபோது, விலங்குகளுக்கு இடையே நேரடித் தொடர்பினாலும் மற்றும் காற்றின் வழியாகவும் நோய் பரவுவது முழுமையாகத் தடுக்கப்பட்டது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த மருந்தை அளிக்கும் போது, அவை நோயிலிருந்து விரைவாகக் குணமடைந்ததுடன், பிறருக்கு நோயைப் பரப்பும் கால அளவும் கணிசமாகக் குறைந்தது. தடுப்பூசிகள் தட்டம்மைக்குச் சிறந்த பாதுகாப்பாக இருந்தாலும், மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி செலுத்த முடியாதவர்களுக்கும், தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கும் இந்த மாத்திரை ஒரு கூடுதல் அரணாக விளங்கும்.
தற்போது விலங்குகளில் மட்டுமே சோதிக்கப்பட்டுள்ள இந்த மருந்து, மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அடுத்தகட்டமாக முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
காற்றின் மூலம் பரவும் தட்டம்மைக்கு செக்! விஞ்ஞானிகளின் புதிய ‘ஆன்டிவைரல்’ மாத்திரை சாதனை!

