கார் லோன், ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு ஷாக்.. ஈஎம்ஐ தாறுமாறாக உயரப்போகுது!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கார், வீடு போன்ற அதிக மதிப்புடைய சொத்துக்களைத் தாண்டி அத்தியாவசிய பொருட்களைக் கூட பர்சனல் லோன் வாயிலாக வாங்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் முடிந்த ஓணம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் ரீடைல் விற்பனை 5 வருடத்தில் இல்லாத அளவுக்கு இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அடுத்து வரும் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திலும் விற்பனை அமோகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அப்படியே வாங்கிகள், நிதி நிறுவனங்கள் பக்கம் திரும்பினால் ரீடைல் கடன் அளவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகக் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தான் ஆர்பிஐ விரைவில் தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என வேல்டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியதில் இருந்து உலகின் பிற வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ராகுல் ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கை அளவிலான மாற்றத்தை அக்டோபர் கூட்டத்தில் அறிவிக்கும், இதைத் தொடர்ந்து டிசம்பர் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் எனக் கணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார் ராகுல். மேலும் இந்த 0.25 சதவீத வட்டி விகித உயர்வும் நாட்டின் உணவுப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பருவமழை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதேபோல் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மோசமாகும் பட்சத்தில் அக்டோபர் கூட்டத்தில் கூட ரெப்போ விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு என ரூபாய் மதிப்பு பாதிக்கக் கூடிய அனைத்து விஷயங்களும் சந்தையில் நிலவுவதால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரெப்போ விகிதம் உயர்வு என்பது சாமானிய மக்கள் முதல் வர்த்தகங்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்கள் நீண்ட கால அடிப்படையில் கடன் வாங்கும் காரணத்தால் அவர்களுக்கு வங்கிகள் ஃப்ளோடிங் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தினாலோ, குறைத்தாலோ ஈஎம்ஐ மாற்றப்படுகிறது. இதர கடன்களுக்கு பெரும்பாலும் நிலையான வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகிறது, எனவே ஆர்பிஐ அறிவிப்பால் ஈஎம்ஐ மாறாது, மாறாகப் புதிதாக வாங்கப்படும் ஹோம் லோன், பர்சனல் லோன், பைக் லோன், கன்ஸ்யூமர் கடன்களுக்கு இந்த வட்டி விகித உயர்வால் ஈஎம்ஐ அதிகரிக்கும்.

