மூவார்,
ஜாலான் புக்கிட் கெப்போங்கில் உள்ள தூய் ஆற்றில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்த சம்பவத்தில் காணாமல் போனதாக நம்பப்படும் 38 வயதான ஓட்டுநரான தெங்கு நிசாருடின் தெங்கு ஜைனுடினைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
இஜா என்றும் அழைக்கப்படும் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியதாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் கூறினார்.
இத்த மீட்பு நடவடிக்கையில் சுமார் 60 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் தொடர்ந்தனர். அதே போல் தீயணைப்புப் படையின் ட்ரோன்களைப் பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
இன்று காலை 10.09 மணி வரை எந்த புதிய தடயங்களும் கிடைக்கவில்லை. புதிதாக தகவல்கள் கிடைப்பெறும் பட்சத்தில் அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்போம். இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஊகங்களையும் உருவாக்க வேண்டாம் என்று பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஜா ஓட்டிச் சென்ற பெரோடுவா ஆக்சியா கார் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தில் காணப்படவில்லை.