Last Updated:
INX மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் சொத்து முடக்கத்தை PMLA மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது.
INX மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் சொத்துக்களை 2018ல் அமலாக்கத்துறை முடக்கியதை PMLA மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரம், பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மோசடியை மறைக்க பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது நிறுவனங்கள் மூலம் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். மேல்முறையீடு மீதான விசாரணை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பாலேஷ் குமார் மற்றும் ராஜேஷ் மல்ஹோத்ரா அமர்வில் நடைபெற்றது.
அப்போது, அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்த ஒரு வருடத்திற்கு பிறகே அரசு தரப்பு புகாரை பதிவு செய்ததால், பறிமுதல் நடவடிக்கை சட்டவிரோதம் என கார்த்தி சிதம்பரம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அவை கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் இதில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி விலக்கு உள்ளது என அமலாக்கத்துறை கூறியது.
பின்னர் அமலாக்கத்துறை வாதத்தை ஏற்றுக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்ததோடு அமலாக்கத்துறை பறிமுதலையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
October 31, 2025 7:50 PM IST
கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை வாதத்தை ஏற்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயம்


