அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரனின் அரைநாண் கயிற்றுக்கும் சரி என்பார்கள். அதுபோல போல அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையான ICCPR (International Covenant on Civil and Political Rights) இன் விதிகள் குறித்து ஒரு சடுதியான எதிர்வினையொன்று சிறிலங்கா காவற்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
வடக்கின் சுயேச்சை கிளாடியேற்றர் எம்.பி மலையக தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அடிப்படையில் இதே ICCPR விதியில் அவரை கைதுசெய்யவேண்டுமென மலையக குடிசார் பிரதிநிதிகள் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவிலும் காவல்துறை தலைமையகத்திலும் இந்தவாரம் முறைப்பாடுகளை பதிவுசெய்த நிலையில் இந்த எதிர்வினை காவற்துறை மாஅதிபரிடமிருந்து வந்துவிட்டது.
அதாவது இந்த சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒருவர் கைதானால் அந்தக் கைதுகளை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்காவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலே தெரிவித்திருப்பது மலையக குடிசார் பிரதிநிதிகளின் முறைப்பாட்டு பதிவுகளுக்கு பின்னர் வெளிவந்திருப்பதால் அப்பம் என்று சொன்னால் அதனை என்ன புட்டுக்காட்டவா முடியும்?
வாகனத்தை மறிக்காமல் சென்றதற்காக அண்மையில் அல்லைப்பிட்டியில் ஒரு பதின்ம இளைஞர் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அதே நாட்டில் பலரை பலியெடுத்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு சதி செய்ய குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்படுவருக்கு திடீர் உடல்நலக்குறைவு(!?) வந்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இடம் இருக்கும் என்ற யதார்த்தம் உள்ள இலங்கையில் இன்று ஒரேநாளில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவும் ரஸ்ய எரிசக்தி உயர்மட்ட ரஷ்ய குழுவும் தத்தமது இராஜதந்திரங்களுடன் நுழைந்துள்ளது.
இவை உள்ளுர் நிலையாக இருக்க உலக நிலவரங்களில் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பாணியில் ஈரானும் அமெரிக்காவும் பேசுவதான விடயத்தில் குழப்பங்கள் தொடரும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது. செய்திவீச்சு..

