அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் நீண்டகாலமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு சந்தேக நபர்கள், நேற்று(09)சனிக்கிழமை இரவு மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைதீவு புறநகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, “கடற்குதிரை” என புனைப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றொருவரிடம் இருந்து சுமார் 20 கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 31 மற்றும் 40 வயதுடைய இந்த நபர்களில் ஒருவர் சிகையலங்காரத் தொழில் செய்பவர் என்பதும், இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ததும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முரணான வாக்குமூலங்கள்
இதேவேளை, இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறையினரை திசைதிருப்பும் நோக்கில் இவர்கள் ஆரம்பத்தில் முரணான வாக்குமூலங்களை வழங்கிய போதிலும், மேலதிக விசாரணைகளின் மூலம் இவர்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்து இக்கடத்தல் தொழிலை முன்னெடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின் நேரடி வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
