ஜோகூர் பாரு: ஜாலான் லிங்காரான் டாலாத்தில் திடீரென பாதையை மாற்றிய வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 20 வயது இளைஞர் உயிரிழந்தாக தென் ஜோகூர் பாரு தெற்கு காவல்துறைத்தலைவர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.
40 வயதான ஒருவர் தனது காரை ஸ்ககூடாயில் இருந்து பெர்மாஸ் ஜெயா நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்தவுடன் அவர்திடீரென இடதுபுறத்தில் இருந்து வலது பக்கம் பாதையை மாற்றினார். சிங்கப்பூரில் இயந்திர தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் உயிரிழந்த இளைஞர் வாகனத்தைத் தவிர்க்க முயன்று முடியாததால் காரின் இடது பக்கத்தில் மோதியுள்ளார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர் சாலையின் இடது பக்கம் தூக்கி வீசப்பட்டதாக ஏசிபி ரவூப் மேலும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. கார் ஓட்டுநர் காயமடையவில்லை. அவர் தற்போது நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் காட்டும் சம்பவத்தின் 37 வினாடி டேஷ்கேம் வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த காணொளி 7,000 க்கும் மேற்பட்ட பகிர்வுகளுடன் 1.6 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.


